சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

Photo of author

By Sakthi

 

சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…

 

திருச்சி மாவட்டத்தில் சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தாய் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரியனம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 8 வயதில் ஹேமேஷ் என்ற மகன் உள்ளார்.

 

இந்தநிலையில் மஞ்சுளாவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் ஊர்க்காவல் படை பணிக்கு செல்லாமல் திருச்சியில் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாயார் அன்னகிளி அவர்களின் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

 

இதையடுத்து மஞ்சுளா யாரிடமும் சொல்லாமல் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க அரியனம்பேட்டை ஊருக்கு வந்துள்ளார். இவரை தேடிக் கொண்டு தாய் அன்னக்கிளி அவர்கள் வந்தார். மேலும் கணவர் சந்திரபோஸ் அவர்களும் ஊருக்கு வந்த பின்னர் மஞ்சுளா அவர்களை சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். ஆனால் மஞ்சுளா அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வர மறுத்துள்ளார். தாய், மாமனார், மாமியார் என யார் சொல்லியும் கேட்கவில்லை. இதனால் கணவன் சந்திரபோஸ் அவர்களுக்கும் மனைவி மஞ்சுளா அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அன்று இரவு தாய் அன்னக்கிளிக்கும் மஞ்சுளாவிற்கும் வாக்குவாதம் முற்றியது.

 

மறுநாள் காலையில் எழுந்த தாய் அன்னக்கிளி அவர்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து மனநலம் குன்றிய மகள் மஞ்சுளா அவர்களின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் மஞ்சுளா அவர்கள் துடிதுடித்து இறந்துவிட்டார். இதையடுத்து கொலை செய்த தாய் அன்னகிளி அவர்கள் தொட்டியம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முசிறி துணை சூப்பிரண்ட் யாஸ்மின், தொட்டியம் பகுதி இன்ஸ்பெக்டர் முத்தையன், சப்-இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி மற்றும் சில காவலர்கள் வந்தனர். மேலும் இறந்து கிடந்த மஞ்சுளா அவர்களின் உடலை பிரதே பரிசோதனைக்கு முசிறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த தாய் அன்னக்கிளி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மனநலம் குன்றிய மகள் சிகிச்சைக்கு வர மறுத்த காரணத்தால் பெற்ற தாயே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.