இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் நாளை மறுநாள் (மார்ச் 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

வருகிற செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அந்தமான் கடல் மற்றும் தெற்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதுபோல், நாளை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.