ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

0
80

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் மூன்று வாரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாட்டு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் 10ந் தேதி துருக்கியில் இருநாட்டு உயர்மட்டக் குழுவினர் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், அதில் எந்தவொரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தையில் ரஷியா தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருப்பதே போர் தொடர முக்கிய காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில்,

இது பேச்சுவார்த்தைக்கான நேரம். இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ரஷியாவின் நடவடிக்கையால் இங்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அதை சரிசெய்ய ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பேச்சுவார்த்தைதான்.

இந்த போரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை நம்மால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. சில நாட்களுக்கு முன் மரியுபோல் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பொதுமக்களை தேடும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K