MGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி!
B. Saroja Devi: நடிகை சரோஜாதேவி, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். அந்த காலத்தில் சினிமாக்களில் இவர் அணியும் உடை, நகை போன்ற ஆபரணங்கள் போன்றவை அனைத்து பெண்களையும் கவரும் வண்ணம் இருக்கும். இவர் தனது 17 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினார். முதன் முதலில் மகாகவி காளிதாசா என்ற கன்னட மொழி படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் தான் சரோஜாதேவி. இவர் தமிழில் திருமணம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானாலும் 1958 ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் தான் இவருக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து கல்யாணப்பரிசு, பாகப்பிரிவினை உள்ளிட்ட படங்களின் மூலமும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்தார்.
மேலும் தமிழில் தங்கமலை ரகசியம், ஓடும் நதி, பத்து மாத பந்தம், கண்மலர், பணமா பாசமா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். 1957இல் பாண்டுரங்கா மஹாத்மியம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதைதொடர்ந்து 1959இல் பைக்காம் எனும் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார்.
இவர் எம்ஜிஆர் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என் டி ராமராவ், ஏ நாகேஸ்வர ராவ் என பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சரோஜா தேவி, எம்ஜிஆருடன் மட்டுமே கிட்டத்தட்ட 26 படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நாடோடி மன்னன் தவிர குடும்பத் தலைவன், அன்பே வா, பாசம், தாலி பாக்கியம், என் கடமை உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்திருக்கிறார். 1967 இல் வெளியான அரச கட்டளை திரைப்படம் தான் எம்ஜிஆருடன் இவர் நடித்த கடைசி திரைப்படமாகும். இவ்வாறு 50 ஆண்டு காலங்களாக திரை துறையில் பணியாற்றிய சரோஜாதேவி சுமார் 200 படங்களில் பணியாற்றி இருக்கிறார். கடைசியாக கடந்த 2009இல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சரோஜாதேவி, எம்ஜிஆர் குறித்து பல விஷயங்களை பல இடங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பாக அவர் கூறியதாவது, ” திருடாதே படப்பிடிப்பின் போது கண்ணாடித் துண்டு ஒன்று என் காலில் குத்திவிட்டது. நான் எம்ஜிஆரை பார்த்து பயந்து அதை சொல்லவே இல்லை. ஆனால் எம்ஜிஆர் அதை கண்டு என்னை அழைத்து என் கால்களை அவரின் தொடை மேல் வைத்து அவரின் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து எனக்கு பேண்டேஜ் மாதிரி கட்டிவிட்டார். வேறு எந்த ஹீரோவாவது அப்படி செய்வார்களா? எம்ஜிஆர் அப்படி செய்தார். நான் அப்போது இந்த அளவிற்கு ஸ்டார் நடிகை இல்லை. சின்ன நடிகை தான். ஆனால் எம்ஜிஆர் அப்படி செய்ததனால் நான் இப்போது வரையிலும் அவரை தெய்வமாக நினைக்கிறேன்” என்று கண்கலங்கிய படி எம்ஜிஆர் குறித்து பேசியுள்ளார்.