அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?
பண மோசடி செயலில் ஈடுபட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.அதேபோல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாள் காவல் முடிந்து அவரை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தினர்.அப்பொழுது 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ட்ரங்க் பெட்டியில் வைத்து நீதிபதி அல்லி அமர்வு முன் சமர்ப்பித்தனர்.
இதை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்க படுவதாக நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.அதன் பின்னர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை மனுவை ஏற்று இந்த வழக்கு எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிப்பட்டது.பின்னர் ஜாமீன் கேட்டு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.மீண்டும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து 7வது முறையாக நீடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் புழல் மத்திய சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை ரத்த கொதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை பிரிவில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டுமென்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது.