MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அப்போது திமுகவே ஆட்சி அமைத்தது. அதன்பின் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை பேசியது பிடிக்காமல் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், ஒருவிழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நீட் தேர்வை ஒழிக்க பல முயற்சிகளையும் திமுக செய்து வருகிறது. கலைஞர் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. அம்மையார் ஜெயலலிதா இருந்தபோதும் தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளே வரவில்லை. அவரின் மறைவுக்கு பின்னர் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் பாஜகவுக்கு அடி பணிந்ததால் நீட் தேர்வு அமுலுக்கு வந்தது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி என செய்திகள் வருகிறது. எனவே, பழனிச்சாமியை நான் ஒன்று கேட்கிறேன். பாஜக கூட்டணிக்கு செல்லும் முன் ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால்தான் உங்களுடன் கூட்டணி என வெளிப்படையாக பழனிச்சாமி அறிவிப்பாரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.