நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர்த்த பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றுகிறார் என பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வெளியானது. பிரதமரின் இந்த உரையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பினை பிரதமர் மோடி வெளியிடுவார் என நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இதனையடுத்து அறிவித்தது போலவே பிரதமர் மோடி முக கவசம் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பொழுது இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதனையடுத்து நாட்டில் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.
பொது மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து உள்ளோம். ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவாலேயே என்று சாத்தியப்பட்டது என கூறினார். இதனையடுத்து இந்த உரையில், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.