டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0
91

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் 339 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனையடுத்து வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பிற்கு ஏற்றவாறு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்த படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்கனவே பல மாநிலங்களில் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள்,வணிக வளாகங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் பல்வேறு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பவர்கள் பல மடங்கு விலையை உயர்த்தி விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாநிலங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மதுக் கடைகளை திறக்க அனுமதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திலும் இது போல கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை அரசு திறக்குமா? என குடிமகன்கள் சார்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அப்படி திறக்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் பிர்லோஷ் குமார் கூறியதாவது. தற்போதைய நிலையில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளதால் மதுக்கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும், கடைகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.