வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது மிக தீவிரத்தை அடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மும்பை மற்றும் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல இடங்களில் 120 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பின், இரவு நேரத்திலும் விடாமல் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சாலையே வெள்ளக்காடாக காட்சி அளித்து உள்ளது. மும்பையின் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் நீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் தண்ணீரில் மிதந்தபடி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அங்கு மேலும், இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் ரயில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கனமழை காரணமாக இரண்டு இடங்களில் மும்பையில் சுவர் சரிந்து விழுந்ததில் மொத்தம் 15 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரோளி மற்றும் செம்பூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி காயத்துடன் இருக்கும் நிலையில், மேலும் பலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செம்பூர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள். மேலும், விக்ரோளி பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலியானார்கள். நேற்றிரவு இந்த சம்பவங்கள் நடந்தாலும், அவ்வப்போது மழை பெய்தாலும், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தாலும், மீட்பு வீரர்கள் அது எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் உயிரை பணயம் வைத்து அனைவரையும் மீட்டு வருகின்றனர்.