இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

0
538
#image_title

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

கிராமம் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் வரும் போது பாதுகாப்புக்காக அதன் வழியே செல்லும் சாலைகளுக்கு ரயில்வே கேட் அமைத்திருப்பார்கள். இப்போதும் கூட பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இது போன்ற ரயில்வே கேட் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் ரயில் கடக்கும் போது அங்கிருக்கும் கேட் மூடப்படும், இதனால் சாலையின் இருபக்கமும் வரும் வாகனங்கள் மணி கணக்கில் வரிசையாக நிற்கும்.

பல்வேறு இடங்களில் இது போன்ற ரயில்வே கேட்டின் இருபுறமும் மணி கணக்கில் மக்களும் வாகனங்களும் மணி கணக்கில் ஒரே இடத்தில் நிற்பதால் அங்கே சிறு வியாபாரிகள் பூ, பழம், நொறுக்கு தீனி உள்ளிட்டவைகளை அங்குள்ளவர்களிடம் விற்பனை செய்வது வழக்கம். இதை நம்மில் பெரும்பாலோனோர் கவனித்திருப்போம். சமீப காலங்களில் பேருந்து நிலையங்களில், டோல்கேட் அமைந்துள்ள பகுதிகளில் நிற்கும் வாகனங்களில் இது போன்ற வியாபாரங்கள் நடந்து வருகிறது. இது போன்ற சிறு வியாபாரிகளை மையமாக கொண்டு அப்போது ஒரு திரைப்படமே வந்துள்ளது.

அந்த வகையில் இதே கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பகவதிபுரம் ரயில்வே கேட்.படத்தின் நாயகி ராஜலெட்சுமி கையில் பேசும் கிளியுடன் அங்கு வந்து சிறு வணிகம் செய்யும் ஒரு பெண் வியாபாரியாக நடித்திருப்பார் .

1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இளையராஜாவின் இன்னிசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியது.அப்போது முதல் தற்போது வரை பல இடங்களில் இந்த படத்தின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரயில்வே கேட் அமைந்திருக்கும் அந்தக் கிராமத்துக்கு முதன் முறையாக பேருந்து வருகிறது. அந்த பேருந்தில் வரும் கண்டக்டராக நடிகர் கார்த்திக் நடித்திருப்பார். ரயில்வே கேட் மற்றும் அங்கு நடக்கும் சிறு வியாபாரிகளின் வியாபாரத்தை மையமாக வைத்து உருவாக்கிய இப்படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்கும்.

அந்தக்காலத்தில் ரேடியோவில் அடிக்கடி நேயர்களால் விரும்பிக் கேட்கும் பாடல் என்ற நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் பாடல்கள் அதிகமாக ஒலிபரப்பாகும். அவற்றில் ஒன்று தான் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி.சைலஜா குரலில் உருவான காலை நேர காற்றே பாடல்.

இந்த பாடலில் துள்ளும் இளமையுடன் கிட்டார் ஒலிக்கிறது. வீணை, தபேலா போட்டி போட்டுக்கொண்டு இசையைத் தருகிறது. பாதையின் இருபுறமும் காற்றில் சலசலக்கும் செடிகொடிகள், நாற்றுகள் என இயற்கை அழகை ரசிக்க வைக்கிறது.

கார்த்திக்கும், ராஜலெட்சுமியும் இணைந்து நடித்த இந்தப் பாடல் நம்மையும் சேர்த்து ரசிக்க வைக்கும் வகையில் இசையும் காட்சியமைப்பும் அமைந்திருக்கும். அடுத்ததாக உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடி அசத்திய செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு பாடல் கேட்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

கிராமியக் காட்சிகளை மனதில் சுமக்க வைக்கும் பாடல். காதலில் மூழ்கித் திளைக்கும் ரகசிய காதல் ஜோடியின் கொண்டாட்டம். எப்போது கேட்டாலும் திகட்டாத அருமையான இசை மற்றும் குரலால் உருவாகியிருக்கும். தானானே…தானானே என ஒலிக்கும் கோரஸ் நமக்குள் ஒரு அழகிய கிராமிய உணர்வைத் தந்து செல்கிறது. கூடவே வரும் பின்னணி இசை பசுமையான நினைவுகளை அவ்வப்போது வந்து செல்ல வைக்கிறது.

அருவிகளில் இருந்து பிரிந்து வரும் ஓடைகள், பாறைகள், தனிமைச்சிறையில் அகப்பட்ட காதலர்களின் பரவசத்தால் நெகிழும் குதிரை என நாம் பாடலை அனுபவித்துப் பார்க்க ஏராளமான விஷயங்கள் இப்பாடல் கட்சிகளில் புதைந்து கிடக்கின்றன. அதிலும் இளையராஜா பாடும் கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே என்ற வரிகள் நம் ரசனையைப் பதம் பார்த்துவிடும் அளவிற்கு அமைந்திருக்கும்.

கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடல் மட்டும் தான் படத்தில் இல்லை.தென்றல் காற்றும் அன்புப் பாட்டும் பாடலை சசிரேகா பாடியிருப்பார். படத்தில் கதையின் ஓடி காதல் வாழ்வின் சோகச்சுவடுகளை நினைத்து நாயகி வருந்துவதாகப் பாடியிருப்பார். சசிரேகாவின் சிறந்த சோலோ பாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல எஸ்.பி.பி. பாடும் ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பாடல் காதலனின் சோகப்பாடலாக அமைந்திருக்கும்.

Previous articleபேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி?