படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!
பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி உள்ளனர். மேலும் மூன்று வகுப்பறை கட்டிடங்களில் உள்ள பூட்டுகளிலும் மனிதக் கழிவுகள் பூசப்பட்டிருந்தன. அதற்கடுத்து பள்ளியின் குடிநீர் தொட்டியையும் அந்த மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதை பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்களும், மாணவர்களும் அதிகாரிகளிடம் மர்ம நபர்கள் தொடர்ந்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கேவலமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது அந்த பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளியின் வகுப்பறை பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.