அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!
கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் நாம்தமிழர் கட்சி போராட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்து மாணவர்களை தேடி பள்ளிக்கு சென்றனர். எங்கே யாருடன் சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியாமல் மாணவர்களின் பெற்றோர் பயந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு மாணவர்கள் மாயமான தகவல் வேகமாக பகிரப்பட்டது.
காவல்துறையினர் தேடுதலுக்கு பின்பு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நாம்தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆறு சிறுவர்களும் திட்டமிட்டு அழைத்துச் சென்றதாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினரும், பெற்றோர்களும் பள்ளி மாணவர்களை மீட்டனர். நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ராகுல் என்பவர் மாணவர்களின் நெருங்கிய சொந்தம் என்கிற அடிப்படையில் கட்சி கூட்டத்திற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர். தங்களிடம் சொல்லாமல் குழந்தைகளை ராகுல் அழைத்துச் சென்றதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. அரசியல் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் கன்னியாகுமரியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.