பாறை மீது பயிர் செய்து பரவசமூட்டும் குமரி விவசாயி..! மாத்தி யோசி.!!

0
102

பாறை மீது பயிர் செய்து பரவசமூட்டும் குமரி விவசாயி.! மாத்தி யோசி..!!

பாறைகளின் மீது நெல்பயிரை விவசாயம் செய்து முப்போகம் நல்ல விளைச்சலை ஈட்டி விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஐத்துள்ளி என்ற பகுதியில் இருக்கும் கல்குவாரியில் எங்கு பார்த்தாலும் ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டது. ஆனால், ஒரு பகுதியில் மட்டும் பாறைகளின் மீது நெல்விளைச்சல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனக்கு சொந்தமான கல்குவாரியை நடத்தி வரும் விவசாயி ராஜ்குமார் என்பவர், நீண்ட நாட்களாக கல்குவாரி செயல்படாமல் போனதால் அந்த இடத்தில் ஏதாவது புதியதாக தொழில் செய்ய முயற்சித்து, பாறைகளின் மீது வளமான மண்ணை கொட்டி நிரப்பியுள்ளார். பின்னர், நெல் விவசாயத்தை பயிரிட முதல் முயற்சி செய்தார். தண்ணீரை பிளாஸ்டிக் டிரம்மில் தேக்கி வைத்து, குழாய்களின் வழியாக நெற்பயிர்களுக்கு சீரான தண்ணீரை பாய்ச்சுகிறார்.

இதன் பயனாக முதலில் அறுவடை செய்த போது கிடைத்த அமோக விளைச்சல் விவசாயி ராஜ்குமாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் நினைத்ததை விட கூடுதல் விளைச்சல் கிடைத்ததால், எப்போதாவது நெல்லை பயிரிட நினைத்தவர் தனது முடிவை மாற்றி யோசித்து எப்போதுமே நெற்பயிரை விளைவிக்க முற்பட்டார். முதலில் 10 சென்ட் பகுதியில் மட்டுமே உரமிட்டு விவசாயம் செய்தவருக்கு கைமேல் லாபம் கிடைத்த காரணத்தால் மேலும் பத்து சென்ட் பரப்பளவில் மண்ணிட்டு பாறைகளின் மீது விவசாயம் செய்ய ஆரம்பித்தார். மழை காலங்களில் குவாரியில் தேங்கும் நீரை அப்படியே வீணாக்காமல் நெல் பயிருக்காக பயன்படுத்தி லாபமீட்டுகிறார்.

இயற்கை வழிமுறையில் விவசாயம் செய்வதால் நல்ல விலை கிடைப்பதாகவும், தனக்கு போக மீதம் இருக்கும் நெல்லை விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். தண்ணீர் வளமுள்ள இடங்களில் பணப்பயிர்களான ரப்பர் மற்றும் தென்னை வளர்ப்பை தவிர்த்து இயற்கை முறையில் நெற்பயிரை விளைவிக்க வேண்டும் என்பதே அவரது அன்பான கோரிக்கையாக முன்வைக்கிறார்.