தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

Photo of author

By CineDesk

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாவட்டம் என்றால் அது சென்னை தான். இங்கு வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என தினமும் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இவ்வாறு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் வள்ளுவர் கோட்டம் ஒன்றாகும்.

தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கடந்த சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் வர உள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பு துவங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை முடிவடைய உள்ளது.

மேலும் இந்த மேம்பாலம் நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைக்கப்பட உள்ளது. அதாவது வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வண்டிகள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேர்ந்து விடும் வகையில் கட்டப்பட உள்ளது.

இந்த சாலை அமைப்பதற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி தந்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.67.16 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்காக ரூ.113.19 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்காக 8014 ச.மீ. அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ. தனியார் நிலமும் தேவை என்று கூறப்படுகிறது. இவ்வாறு மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் விரைவில் இதற்கான நில எடுப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.