இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

0
115

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் கண்டறியப்பட்ட நோய்தொற்று கொரோனா வைரஸ். அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு ‘ஆல்பா’ என்று பெயரிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்றானது உருமாறியது கண்டறியப்பட்டது. இந்த வகை  உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த டெல்டா வகை கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. முதல் அலையை காட்டிலும் கொரோனாவின்  இரண்டாம் அலை இந்தியாவை மிக மோசமாகப் பாதித்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமானது. மேலும் கொரோனா வைரசை காட்டிலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவியது.

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் என்று பெயரிட்டது. உலகம் முழுவதும் பரவியுள்ள டெல்டா வைரசை காட்டிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தற்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒமைக்ரான் வைரசில் இருந்து உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்த மாறுபாடு அடைந்த  வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமைக்ரானின் இந்த புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Previous articleஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!!
Next article15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!