நீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

0
81

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா நடவடிக்கைகள் முழுவதுமாக முடக்கப்பட்டதால் சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் என பலரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் மாவட்டத்திற்குள் பயணிக்க நடைமுறையும் ரத்து செய்தது. ஆனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகள் கட்டாயமாக இ பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயமாக இ பாஸ் பெற்று வர வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து சுற்றுலா செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மேலும், மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக தாராவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படும் என்றும், அரசின் அறிவிப்பிகளை தொடர்ந்து மற்ற சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவதால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.