திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.
குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.
அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதுபோன்று இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நித்யானந்தா சிஷ்யைகளான ப்ராணபிரியா மற்றும் பிரிய தத்துவா இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த நவம்பர் 27ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தான் ஆசிரமத்தில் இருப்பதாகவும், அவர்களை யாரும் சித்திரவதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நேற்று அகமதாபாத்தில் உள்ள மிஷ்ராபூர் ரூரல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரவிட்ட நீதிமன்றம் இருவரும் தீவிர குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.