என்ன நடந்தாலும் சரி நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியாது..அண்ணாமலை திட்டவட்டம்..!!
நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என கோவை தொகுதி வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அண்ணாமலையும் கோவை தொகுதியில் உள்ள சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பெண் ஒருவர் அண்ணாமலையிடம், குடிநீர் இணைப்பு இலவசம் என்று கூறுகிறீர்கள் ஆனால் 3 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். நீட் தேர்வால் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இருந்தும் ஏன் அந்த தேர்வை கட்டாயப்படுத்துகிறீர்கள்? அரிசி பருப்புக்கு எதற்கு ஜிஎஸ்டி? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இந்த கேள்விகளை எல்லாம் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கேட்டிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. மேலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்துதான் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அப்படி ஒரு அரசியல் எங்களுக்கு வேண்டாம்.
ஏனெனில் முதல் முறையாக நீட் தேர்வு மூலம் ஏழை மாணவ மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார்கள். ஏழை மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும். இல்லாவிட்டால் திமுக அமைச்சர்களின் மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டி படிக்க வேண்டும். ஏழைகளால் அவ்வளவு செலவு செய்ய முடியுமா? நீட் தேர்வு காரணமாக எந்த மாணவர்களும் உயிரிழக்கவில்லை. அவர்களை தூண்டி விடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.