ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்! அதிமுக தலைமை அலுவலகம்!
அதிமுக தலைமை செயலகம் முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு தலைமையிலும் இபிஎஸ் ஒரு தலைமையிலும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பிற்காக போட்டியிட்டு வருகின்றனர்.
இரண்டு தரப்பிலும் கடும் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களும்
நடந்து வந்த நிலையில் ஜூலை-11 நடந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால
பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் அந்த
கூட்டத்திலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ் இடம் இருந்து பறிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் தலைமையில் இருந்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு வரவு- செலவு கணக்குகள் வருமான வரித்துறை கடிதத்துடன் சமர்பிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையமும் அதனை ஏற்றுக்கொண்டு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில்
பதிவேற்றம் செய்தது ஓபிஎஸ்க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன்
பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீதிக்கு வந்து தனிக்கட்சி நடத்த தயாரா? என
இபிஎஸ்க்கு அறைகூவல் விடுத்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல்
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமியும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் கட்சியின் கொடி, மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் எழுந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி இபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இது மாதிரி தவறாக பயன்படுத்தி
வருவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க பணிக்கப்பட்டுள்ளார்.உயர் நீதிமன்றமே ஏற்ற பிறகு
இது போன்று செயல்படுவதற்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.