உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்?

Photo of author

By Gayathri

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்?

கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம்.

இவ்வளவு நன்மை கொண்ட கேழ்வரகு அடை செய்வது எப்படி என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 4 கப்

பெரிய வெங்காயம் – 2

காய்ந்த மிளகாய் – 6

சீரகம் – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 4 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

பூண்டு – 8 பல்

உப்பு – தேவைக்கேற்றவாறு

எண்ணெய் – 6 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை, பூண்டு தட்டியது ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து மாவில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

மாவு சப்பாத்தி மாவை விட சற்று தளராக இருக்க வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வட்டமாக அடையை தட்டவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை சுற்றி ஊற்றி வேகவிட வேண்டும். ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேகவிட்டு எடுக்க வேண்டும். சுவையான சத்தான கேழ்வரகு அடை தயாராகிவிடும்.