ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!
முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். மேலும், அதன்படி இந்த புகாரை சரிபார்த்தபோது 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல இரட்டை வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒருமுறை மின்னணு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கு வாக்கு விழுவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஒருமுறை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவாகும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கிடையில், மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரம் மூலம் சரிபார்க்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
இந்த வழக்கில் வாதிட்ட பிரசாந்த் பூஷன், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாக வாய்ப்புள்ளது. அதேபோல மென்பொருள் மூலம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை பதிவு செய்யவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே வாக்காளர்கள் தாங்கள் அளித்த உறுதி செய்ய விவிபிஏடி சீட்டுக்களை பெற அனுமதிக்க வேண்டும்” என்று கோரினார். அதேசமயத்தில் இன்று காசர்கோடில் நடந்த இரட்டை வாக்கு பதிவாகும் சம்பவத்தையும் பிரசாந்த் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.