தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலது புறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிதான் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இது கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டு வருவாய் வந்து கொண்டிருக்கிறது.
கொரோனா காரணமாக ஊரடங்கு என்பதால் ஏரியை ஏலம் விடாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு வலைகளிலும் தூண்டில்களிலும் மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்தும் உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீன் பிடிப்பதில் இரு பிரிவினருக்கிடையே தகராறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு பிரிவினர் ஏரியில் விஷம் கலந்து இருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்கள் பாதிப்படைந்து செத்து மிதந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையிலும் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருவதாக மக்கள் மீன்பிடிப்பவர்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.