நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்!

0
66

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு ஆனது முதலில் மே மாதம் 31ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்த மாநில அரசு கடந்த வாரம் இந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஊரடங்கில் காய்கறி, பழங்கள் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்த முறையும் அதற்கான அனுமதி வழங்கப்படாத சூழலில் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று வீடு வீடாக சென்று தள்ளுவண்டிகளில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வீடுகளுக்குச் சென்று மளிகை பொருட்களை டெலிவரி செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கிடையில் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருக்கின்ற காய்கறி சந்தைகளில் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில்லரை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, சில்லறை வியாபாரிகள் மொத்த விற்பனை வியாபாரிகளிடமிருந்து மளிகை பொருட்களை வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கிய பின்னர் தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் பாதிக்காத வகையில் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்த சூழலில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இன்று காலை முதல் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்கள் இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.