ரஷியாவின் தீவிர தாக்குதலால் கடந்த இரண்டு நாளில் ஒரு லட்சம் பேர்! உக்ரைன் அதிபர்!!
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதியன்று போர் தொடங்கி இன்றுவரை தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே தங்களின் இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா தற்போது ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நகரங்களை சுற்றிவளைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வந்த சூழலில் நாட்டின் மேற்குபுற நகரங்கள் மட்டுமே பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. அதன்படி கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நகரங்களில் சிக்கியிருந்த வெளிநாட்டினர் மற்றும் உக்ரைன் மக்கள் மேற்கு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
நாட்டைவிட்டு வெளியேற நினைத்தவர்களும் மேற்கு நகரங்கள் வழியாகவே அண்டை நாடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் ரஷிய படைகள் உக்ரைனின் மேற்கு நகரங்கள் மீதும் நேற்று தாக்குதல்கள் நடத்த தொடங்கின. இதையடுத்து, ரஷிய படைகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
எதிரி அழிக்க விரும்பும் நகரங்களில் இருந்து எங்கள் மக்களை காப்பாற்ற நாங்கள் அனைத்தையும் செய்கிறோம். மனிதாபிமான வழித்தடங்கள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுமி, டுரோஸ்டியானெட்ஸ், கிராஸ்னோபிலியா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்க தேவையான அனைத்தையும் நாங்கள் செய்திருந்தாலும், ரஷிய துருப்புக்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை என கூறினார்.