ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.
இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என பல பிரபலங்களைக் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உள்ள வாய்ப்பினை பயன்படுத்தி, ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம், கார் வாங்கலாம், பல பரிசுகளை வெல்லலாம் என விளம்பரங்கள் டிவிகளிலும், ஆன்லைனிலும் இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால் அதில் லட்சக்கணக்கானோர் அந்த சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பிரபலங்களை பயன்படுத்துவதால் இளைஞர்கள் அதன் மீது மோகம் கொண்டு சூதாட்டங்களில் விழுந்து விடுகின்றனர்.
சமீபத்தில்தான் டிபி. சத்திரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் போட்டு அவ்வளவு பணத்தையும் இழந்துவிட்டு, பிறகு கடை முதலாளியின் பணத்தைத் திருடி அதையும் சூதாட்டத்தில் போட்டு அந்த பணத்தையும் இழந்ததால் மன விரக்தியில் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்பு வலுத்தது.
இதனடிப்படையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியதாவது, “ஆன்லைன் சூதாட்டம் ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்து பிறகு அதன் மீது அடிமையாக்கும் சூழலை ஏற்படுத்திவிடுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
கிரிக்கெட் வீரர் கோஹ்லி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை பயன்படுத்தி இளைஞர்கள் மீது ஆசையை ஏற்படுத்தி மூளைச்சலவை செய்யப்படுகிறது. இந்த சூதாட்டத்தில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் சூதாட்டத்தில் போட்டு, அத்தனையும் இழந்து விடுவதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ப்ளூவேல் விளையாட்டு தற்கொலை செய்யத் தூண்டுவதாக இருந்ததால் அதனைத் தடை செய்யப்பட்டது. இந்த சூதாட்ட விளையாட்டுகள் அதை விட வீரியம் மிக்கவை. இதனால் சமீபத்தில் டிபி சத்திரத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரே சாட்சி.
மேலும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிர்வகிக்கும் வலைத்தளங்களை தடை செய்வதுடன், சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மானுவினை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என எம்.எம்.சுந்தரேசன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு சூரிய பிரகாசம் நேற்று மனுவினை முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கானது ஆகஸ்டு 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.