எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்!
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்தெடுக்கபட்டபின், அவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார பிரச்சனையில் பல சிக்கல்கள் கட்சியில் உருவாகியது. இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என பழனிசாமி தரப்பினர் கூறிவந்தனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய வேண்டும் என கூறியதால் பன்னீர்செல்வம் கோபித்து கொண்டு பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் சென்றார்.
இதனிடையே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பன்னீர் அணியினர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்து வந்தனர். மொத்தம் 10 வழக்குகள் போடப்பட்ட நிலையில் அனைத்திலும் எடப்பாடியே வெற்றி வாகை சூடினார். இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அதிமுகவிலிருந்து பன்னீர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
பன்னீர் செல்வம் தனது கடைசி வாய்ப்பாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை பெறுவதில் பெறும் சிக்கல் நீடித்தது வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இரட்டை இலை பெறுவதில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தை எடப்பாடி தரப்பு அணுகிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு வழக்கின் தீர்ப்பில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை யாருக்கு ஒதுக்குவது என்பதில் தேர்தல் ஆணையம் இன்னும் 10 நாட்களில் தனது முடிவினை அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவினால் எப்படியும் தங்கள் பக்கம் சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்தில் புதியமனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொது செயலாளராக அறிவிக்க கூடாது, தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும், அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாதாகவும் கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
பன்னீரின் இந்த மனுவால் தற்போது மீண்டும் எடப்பாடிக்கு இரட்டை இலையை பெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதே சமயத்தில் இதுவரை பன்னீர் தரப்பினர் தொடுத்த அனைத்து வழக்குகளையும் சாதாரணமாக கடந்த சென்ற எடப்பாடி இதனையும் அதே போல கடந்து சென்றுவிடுவார் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.