தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் கொரிய ஆளுங்கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக அந்தச் செய்தியாளர் சென்றிருந்தார்.