தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் ஒன்றை இயற்றியது.
இந்த சட்டத்திற்கு ஆளுநரும் அப்போது ஒப்புதல் வழங்கி சென்ற வருடம் தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்த்தார்கள். அதேபோல அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தார்கள்.
இந்த சூழ்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பள்ளி மாணவி் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில் பதினோராம் வகுப்பு வரையில் தனியார் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் மட்டும் அரசு பள்ளியில் படித்து இருக்கின்றேன். இருந்தாலும் எனக்கு தமிழக அரசு அறிவித்து இருக்கின்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த இட ஒதுக்கீட்டு முறையை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று மறுத்து தெரிவித்தார்கள். அதோடு அந்த மாணவி ராஜ்ஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு அறிவுரை வழங்கி இந்த வழக்கை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.