வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..??
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்யலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னயில் மட்டும் சுமார் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் 16 பிங்க் நிற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு தலா ஒன்று என்ற முறையில் 16 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என அனைவருமே முழுக்க முழுக்க பெண்களாக மட்டுமே இருப்பார்கள்.
ஏனெனில் இந்த பிங்க் நிற வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. கோடை வெயில் காரணமாக கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மூதாட்டிகள் ஆகியோருக்கு இங்கு பிரத்யேக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்த வாக்குச்சாவடிகளில் உதவி மையம், மூதியோர் ஓய்விடம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் ஆகியவையும் உள்ளன.
இந்த பிங்க் நிற வாக்குச்சாவடி பெண்கள் மற்றும் மூதாட்டிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படு இருந்தாலும் இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகள் மற்றும் மூதாட்டிகளின் நலன் கருதி இதுபோன்ற பிங்க் நிற வாக்குச்சாவடிகள் அமைத்திருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது. மேலும், வாக்காளர்களின் கவனத்தையும் இந்த பிங்க் நிற வாக்குச்சாவடிகள் ஈர்த்துள்ளன.