காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

0
310
#image_title

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவரின் தாயார் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அபிநயாவை  சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அங்கு அபிநயாவுக்கு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 14ஆம் தேதி அபிநயாவுக்கு காதில் ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிநயா கூறியுள்ளார்.

இது பற்றி அபிநயாவின் தாயார் மருத்துவர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் எக்கோ பார்த்தனர். அதில் அபிநயாவுக்கு அதிகமாக மூச்சு திணறல் இருப்பதாக தெரிய வரவே மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநயா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அதைக் கேட்டு அபிநயாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அபிநயாவின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து தவறான சிகிச்சை அளித்ததுடன் கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அபிநயாவின் உறவினர்கள் மற்றும் திருநங்கைகளுடன் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஜான் ஆல்பர்ட், முகம்மது நாசர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக குவிக்கப்பட்டனர். 

மறியலில் ஈடுபட்டவர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அங்கு வரவேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் மருத்துவமனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மாதிரியெல்லாம் சுமார் 3  மணி நேரம் திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Previous articleஇந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!
Next articleஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு!