கேரள மாநிலம் இடுக்கியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மழை ஆக.10ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் இன்று பெய்த கன மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 57 தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலச்சரிவில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மூணார் பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த கன மழையால் இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைச்சரிவுக்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுவரை 9 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும்போது பெரிய அளவில் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் நிலச்சரிவில் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்களை தண்ணீர் சூழ்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இடுக்கியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தேசிய மீட்பு படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் களத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சமும், படுகாயடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.