திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!
இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது சுட்டுரையில் பதிவிட்டதால், நாட்டு மக்களிடையே பரபரப்பு தொற்றியது. சரியாக 8.45 மணிக்கு பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக கூறினார். இந்த பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும் என்ற அவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மக்களின் வலியை புரிந்து கொண்டிருப்பதாக கூறிய பிரதமர், உயிரை பணயம் வைத்து பணியாற்றும் முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த சூழலில் மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றார்.
தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, உற்பத்தி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உலகிலேய மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதாகவும் மோடி கூறினார். நாட்டில் இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்ட்டுள்ளதாகவும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
ஏழை எளிய மக்கள், பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நிலை என்று கூறிய பிரதமர், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முழு ஊரடங்கு நடைமுறை விதிக்க சாத்தியமில்லை என்ற பிரதமர் மோடி, பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளைத் தவிர வேறு எந்த பணிக்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தினார். தொற்று பரவலைத் தடுக்க கடைசி ஆயுதமாகவே முழு ஊரடங்கை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.