சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம்

Photo of author

By Anand

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம்

சமீப காலமாக இட ஒதுக்கீடு குறித்தும்,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த 42 ஆண்டுகளாக இதற்கு குரல் கொடுத்து வருவது பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குவதற்கான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 127 ஆவது திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி குறித்த குரல்கள் மீண்டும் ஓங்கி எழத் தொடங்கியுள்ளன.

பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 27 விழுக்காட்டிலிருந்து அதிகரிக்க வேண்டும்; ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை அகற்ற வேண்டும்; நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார், லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளையும் கோரிக்கைகளையும் பார்க்கும் போது இதே கோரிக்கைக்காக கடந்த 42 ஆண்டுகளாக நான் போராடி வருவதும், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரை நானும் பிற சமுதாயங்களின் தலைவர்களும் நேரில் சந்தித்து கடுமையான அழுத்தம் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதன் மூலம் பாதுகாக்கப்பட்டாலும் கூட, அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, வாய்ஸ் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் அனைத்து சமுதாயத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், கொங்கு முன்னேற்ற கழகம் வி.ஆர்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நாடார் பேரவை செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், அகில இந்திய தேவர் பேரவை நிறுவனர் வி.ராமகிருஷ்ணன், நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்பட 38 சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றுப் பேசிய நான்,’’தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு வருடத்துக்குள் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியாக எடுக்கப்படும் கணக்கின்படி ஒவ்வொரு சாதியிலும் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. 40க்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்திக்க அணுகி உள்ளோம். உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் மீண்டும் அனைத்து சமூக அமைப்புகளும் கூடி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்தேன்.

அதைத் தொடர்ந்து 13.10.2010 அன்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரை எனது தலைமையில் 27 சமுதாயங்களைச் சேர்ந்த 44 தலைவர்கள் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணைப்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பாமக தலைவர் ஜி.கே.மணி, யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் ஆகியோர் அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இந்த சந்திப்பில் சட்ட அமைச்சர் துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ்நாட்டில் எப்படி, எந்த வழிமுறைகளில், எந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து எங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைக்கேட்ட அப்போதைய முதலமைச்சர் கலைஞர், இதில் தனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்துவிட்டு, உடனடியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கலைஞர் உறுதியளித்தார்.

ஜாதிவாரியான கணக்கெடுப்பை 2021 ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். வெறும் தலைகளை எண்ணும் கணக்கெடுப்பால் பலன் இல்லை என்று தேசிய அளவில் சமுக ஆர்வலர்களும் கூறியிருப்பதையும் முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் என்றும் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், அதன்பின் 8 மாதங்கள் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். எனினும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முயற்சி கூட அவர் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.