பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போட்டுவந்தார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இதில் உச்சபட்சமாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து பதிவு ஒன்றையும் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பாமகவினர் கார்த்திக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பாமக சேலம் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையிலான பாமகவினர், எடப்பாடி காவல் நிலையத்தில் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாமக மற்றும் பாமக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
(தனிப்பட்ட நபரையோ, அரசியல் தலைவரையோ தரக்குறைவாக, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே பொதுவெளி, சமூகவலைத்தளங்களில் உங்கள் கருத்துக்களை நேர்மையாக பதிவிடுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்)