சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

0
73

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. ராஜேஷின் தாயாருக்கும் ஸ்வேதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் ஸ்வேதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரின் உடலை சாலைக்கு தூக்கி சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, ஸ்வேதாவின் இறப்பிற்கு காரணமான அவரது மாமனார், மாமியார், கணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.