பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

0
208

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

கடந்த அக்டோபர் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜக நிர்வாகிகளும்,நடிகைகளுமான குஷ்பூ,நமிதா,காயத்ரி ரகுராம் மற்றும் கௌதமி ஆகியவரை ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது.

இவரின் பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இதைக் குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும் பொழுது அவர்கள் வளர்ந்த விதத்தையும் அவர்கள் வளர்க்கப்பட்ட மோசமான சூழலையும் காட்டுகிறது.ஒரு பெண்ணின் கருப்பையை அவமானப்படுத்தும் இவர்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று அழைக்கிறார்கள்.இதுதான் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்விகள் எழுப்பி முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி ஆகியோர்களின் ட்விட்டர் கணக்கை டேக் செய்திருந்தார் குஷ்பூ.

குஷ்புவின் இந்த ட்விட்டருக்கு பதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி,ஒரு பெண்ணாகவும் சகமனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும்,இதை யார் பேசியிருந்தாலும் பேசப்பட்ட இடம் மற்றும்அவர்கள் பொறுப்பு வகிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஏற்க முடியாது என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.மேலும் எனது தலைவர் ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவிற்கும் இது ஒரு போதும் ஏற்புடையது இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கனிமொழியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் பாஜக பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய சைதை சாதிக்கும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

திமுக பேச்சாளரான சைதை சாதிக் இது குறித்து பிரபல செய்தி சேனல் ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.அவர் அதில் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுவது எங்கள் நோக்கம் கிடையாது.இதனால் குஷ்பூ உள்ளிட்டவர்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்? டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர் காரணம் என்ன?
Next articleதொடர்ந்து இரண்டாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!