தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!
தமிழர்கள் கொண்டாடும் நிகழ்வுகள் எல்லாமே பல்வேறு நல் கருத்துகளை அடங்கிய வரலாற்று பெட்டகம்தான். அந்த வகையில் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும், தனக்கும் சேர்த்து கொண்டாடப்படும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும்.
பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்பதமிழர்கள் அனைவரும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் வெளியேற்றும் வகையில் அதை எரித்து பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை எரிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற தீய எண்ணங்களையும் நெருப்பில் போட்டு போக்குவதையே போகிப் பண்டிகை என்கிறோம். இதைத் தான் இருவரியில் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்று நம் முன்னோர்கள் சுருக்கமாக கூறினர்.
இந்த போகிப் பண்டிகையில் வீட்டையும், மனதையும் புதுப்பித்து வருங்காலத்தில் வேளாண்மை, கைத்தொழில், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப் படுகிறது. இதன் கருத்தாகவே “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற வரலாற்று சொல்லாடலை அடிக்கடி பயன்படுத்துகிறோம். மார்கழியின் கடைசி நாளாகவும், மாற்றத்தின் தொடக்க நாளாகவும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வீட்டின் முகப்பில் அரிசி கோலமிட்டு பல்லுயிர் ஓம்புதலையும், கொத்து சாணியில் உருவம் செய்து கடவுளை வழிபடும் கலாச்சாரத்தையும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே இந்த போகிப் பண்டிகை.
ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்த நெல்லை அறுவடை செய்து இந்திர கடவுளுக்கு வணங்குவதும், புதிய நெல்லின் பச்சரிசியை கொண்டு பொங்கலிட்டு வழிபடுவதும் காலம்காலமாக நடந்துவரும் தமிழர் கலாச்சாரமே. உலகின் பண்பட்ட நாகரிகம் என்றால் அது தமிழர்களின் நாகரிமே, இதற்கு பொங்கல் பண்டிகை போன்ற மரபுவழி கலாச்சாரங்களே சாட்சியாகும்.
வறுமை ஒழிந்து வளமுடன் வாழ அனைவருக்கும் நியூஸ்4 தமிழ் சார்பாக இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.