பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!
உலகெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான் புத்தாடை, சூரிய வழிபாடு, விவசாய மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ணம் அடிப்பது, வீட்டை அழகு படுத்துவது, கோலம் போடுவது, வாகனங்களை சுத்தமாக்குவது என்று பண்டிகையின் நான்கு நாட்களுமே குதூகலமாக இருக்கும்.

பழையன கழிந்து புதியன புகுதலை போகிப் பண்டிகை எனவும், பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைப்பதை பெரும் பொங்கல் எனவும், தமிழர்களின் மரபு விவசாயத்தின் தனி அங்கமான மாடுகளை சிறப்பித்து வழிபடுவது மாட்டுங் பொங்கல், உழவர்களின் பெருமைகளையும், மேன்மைகளையும் கொண்டாடும் கடைசி நாளை உழவர் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடிப்பட்டம் தேடி விதைப்பது கிராமங்களில் தான் அதனாலே பொங்கல் பண்டிகை கிராமங்களில் மிக சிறப்பாக பண்பாடு கலாச்சாரம் மாறாமல் நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பானை, கரும்பு, மஞ்சள், மாட்டுக் கயிறு, கிழங்கு வகைகள், அரிசி போன்ற பல்வேறு பொருட்களின் விலை பொங்கல் பண்டிகையின் காரணமாக உயர்ந்துள்ளது. சொந்த பந்தங்களோடு இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.