பிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!!
இந்திய அளவில் பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய நுட்பமான அரசியல் வித்தகர்தான் இந்த பிரசாந்த கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார்.
இவருடைய ஆலோசனைகளின் மூலம் பிஜேபி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மோடி முதல் நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வெற்றிவாகை சூட வைத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கவனித்து, அந்த மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறி பல இடங்களில் வெற்றிக்கனியை பறிக்க பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கலைஞரின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி திமுகவின் செயல்தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்கும் நோக்கத்தில், பிரசாந்த் கிஷோரின் குழு திமுகவுடன் இணைந்து தேர்தல் வியூகங்களை வகுக்க உள்ளதாக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் அரசியல் நகர்வுகளால், வருங்காலத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்குமா அல்லது கடந்த காலத்தை போல இலவுகாத்த கிளியாக இருக்க வேண்டுமா என்பதை வருகின்ற தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இக்குழுவின் வருகை உடன்பிறப்புகளுக்கு தெம்பூட்டும் விதமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.