தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து! பலியான கல்லூரி மாணவர்!
அரியலூர் மாவட்டத்தில் தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலை சாலையில் விரிவாக்க பணிக்காக பொதுத்துறையினரால் பள்ளம் தோண்ட பெற்று இருந்தது.
திடீரென அந்த பள்ளத்தில் இறங்கிய பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்நிலையில் விபத்தைக் கண்டு அதிர்ந்த அங்கிருந்த பொதுமக்கள், மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 52 பேர் காயம் அடைந்தனர். காலை நேரம் என்பதால் பேருந்தில் மிகவும் கூட்டமாக காணப்பட்டது. வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என பலர் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பொதுமக்களுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
இதில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் 34 பேர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 18 பேர் செந்துறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.