கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து சாத்தியம் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். நார்த் கரோலைனாவில், சாத்தியமான தடுப்பு மருந்துக்குரிய பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் டிரம்ப் முகக் கவசம் அணிந்தவாறு பார்வையிட்டார். ஆனால், தடுப்பு மருந்து நோயைக் குணப்படுத்துவதில் எந்த அளவு பங்காற்றும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறினர். அமெரிக்காவில் 4.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 147,000-க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்தனர். என்றாலும், தடுப்பு மருந்து குறித்து அதிபர் டிரம்ப் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்கர்களுக்குத் தடுப்பு மருந்து கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.