சென்னை மெரீனா கடற்கரையில் அக். 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த வழக்கு ஒன்றில், கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேநேரம் மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது எப்போது..? என்பது தொடர்பாக தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக். 5ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அக். 31ம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.