என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஃபயாஸ் கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஃபயாஸுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள். திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொலையாளி ஃபயாஸின் தந்தை செய்தியாளர்களிடம் சில விஷயங்களை பேசியுள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது, “என் மகன் செய்த தவறுக்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இளைஞர்கள் யாரும் என் மகன் செய்த தவறை செய்யாதீர்கள். என் மகனின் இந்த செயலுக்காக நான் சாகும் வரை முனவல்லி பகுதி மக்களுக்கு சேவை செய்வேன்.
இதுபோன்ற சம்பவங்களால் தான் பெண் குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பவே மக்கள் அச்சப்படுகிறார்கள். பலமுறை நான் இதுதொடர்பாக ஃபயாஸை கண்டித்துள்ளேன். இதனால் அவன் என்னிடம் பேசுவது கூட கிடையாது. நான் என் மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால் அவன் இப்படிப்பட்ட ஒரு செயலை செய்து விட்டான். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனி இப்படி ஒரு தவறை செய்யவே கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டுமென” கூறியுள்ளார்.