காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் – தேர்தல் நேரம் குறித்து சுவாரஸ்ய பேச்சு!!
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் ஓர் புதிய கிளையினை துவங்கியுள்ளது காவேரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் உரையாற்றியுள்ளார். அதில், ‘நான் கடந்த 25 வருஷமா எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களில் கலந்துக்கொள்வதில்லை. ஏனெனில், உடனே அதில் எனக்கு பங்கு இருக்கு, நான் அதில் பார்ட்னர் என்று கூறிவிடுவார்கள். ஒரு விழாவில் கலந்துகொண்டால் தொடர்ந்து கூப்பிடுவார்கள் என்று பங்கேற்பதில்லை’ என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த உடம்பு அப்போலோ, ராமச்சந்திரா, காவேரி மருத்துவமனைகளில் துவங்கி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு எல்லாம் போய்ட்டு வந்திருக்கு. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேல் எனக்கு ஓர் தனி மரியாதை உண்டு. முன்னணி தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இவர்களது உதவியால் தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்’ என்று கூறினார். மேலும், இந்த இடத்தில் இருக்கும்பொழுது தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருவதாக கூறிய ரஜினி, “இதே இடத்தில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் படப்பிடிப்பினை நடத்த ஓர் வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டில் அப்படம் மட்டுமின்றி பல்வேறு படங்களின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது” என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர், ‘ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் நான் ஒருமுறை நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். உடனடியாக மேஜர் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய பெர்சனல் டாக்டர் உடனடியாக அங்கு வந்து யார் ஆப்ரேஷன் செய்யப்போகிறார்கள் என்று அவர் கேட்டார். மருத்துவர் சேகர் தான் என்று கூறியதும் அவர் உடனே அதற்கு ஓகே சொல்லிவிட்டார். அதன் பின்னர், 99% ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகிடும்னு என்று ஆப்ரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்கு முன்னாடி மருத்துவர் சேகர் கூறினார். ஆனால் எனக்கு அந்த ஒரு சதவீதம் குறித்து யோசனை அனஸ்தீஷியா கொடுக்கும்வரை இருந்தது. பின்னர் மயக்கம் தெளிந்து பார்க்கும் போது ஆப்ரேஷன் சக்ஸஸ் என்று கூறினார்கள்’ என்று தன்னுடைய மருத்துவ ரீதியான அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஒருகாலத்தில் கமலின் வீடு பக்கத்தில் காவேரி மருத்துவமனை என்று கூறிய காலம் போய், தற்போது காவேரி மருத்துவமனை அருகில் கமலின் வீடு என்று சொல்லும் காலமாகிவிட்டது என்று கலாய்த்த ரஜினி, ‘இதுக்காக கமல்ஹாசன் எதுவும் நினச்சிக்க வேண்டாம், மீடியா ஆட்கள் யாரும் கமல்ஹாசனை ரஜினி கலாய்த்ததாக எழுதிடாதீங்க’ என்று கூறி சிரித்தார். இதனையடுத்து பேசிய அவர், ‘இங்கு பேச வேண்டாம்னு நெனச்சேன். மீடியா ஆட்கள் வருவாங்க கொஞ்சம் பேசுங்கன்னு சொன்னாங்க. இங்க வந்ததும் இத்தனை கேமராக்களை பார்த்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு’ என்று பேசிய அவர், ‘தேர்தல் நேரம் வேற இது. மூச்சு விடவே பயமா இருக்கு’ என்று கலகலப்பாக பேசியுள்ளார்.