ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!
தற்போது தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உதவித்தொகை வழங்க பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
இதன் காரணமாக நியாய விலைக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பயோ மெட்ரிக் கருவிகள் தற்போது குடிமைப்பொருள் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்களாக இருந்தாலும், முகவரி ஒரே மாதிரியாக இருந்தால் பயோ மெட்ரிக் மூலம் பொருட்களை பெற்று வந்தார்கள்.
ஆனால், தற்போது இந்த பயோ மெட்ரிக் கருவிகள் குடிமைபொருள் அலுவலகத்திற்கு தரப்பட்டதால் வெளியூர் அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடிமைபொருள் அதிகாரிகள் கூறியதாவது, மகளிருக்கான உதவித்தொகை வழங்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பயோ மெட்ரிக் கருவிகளை ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி உள்ளனர்.
எனவே, எந்த முகவரியில் ரேஷன் கார்டு இருக்கின்றதோ அங்கு சென்று தான் பொருட்களை வாங்க முடியும் என்று அறிவித்துள்ளனர். இந்த மகளிர் உதவித்தொகையானது தமிழகம் முழுவதும் செப்டம்பர் பதினைந்தாம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது.
எனவே, செப்டம்பர் மாதம் வரை வெளியூர் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது சிரமம். ஆனால் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த நடைமுறை இருக்காது என்று கூறி உள்ளனர்.
அது வரையில் பழைய நடைமுறையான, மக்களிடம் கையெழுத்து வாங்கி பிறகு ரசீது கொடுத்து பொருட்கள் வழங்கும் முறை கொண்டு வர இருப்பதாக கூறி உள்ளனர்.
இந்த திடீர் அறிவிப்பால் வெளியூர்களில் வசித்து ரேஷனில் பொருட்கள் வாங்கி வந்தவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.எனவே, அவர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.