நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக மதுரையில் அதிவேகமாக விழா ஏற்பாடு நடைபெற்றுவருவதோடு, பெரிய அளவில் பணம் செலவழித்து விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் ஆவது நீட் தேர்வு ரகசியத்தையும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்ததை பற்றியும் உதயநிதி பேசுவாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக மதுரையில் பிரமாண்டமாக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உதயநிதி ஸ்டாலினிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள முதியோர் ஓய்வு ஊதியங்களை மீண்டும் வழங்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் முன் வருவாரா?. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கிய திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு இன்றைக்கு அந்த திட்டங்கள் செயல்படுமா, வருமா, வராதா என்று மக்கள் வருதத்தில் காத்திருக்கின்றார்களே, குறிப்பாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிற திட்டத்தின் உண்மை நிலை அறிய காத்திருக்கிறார்களே, அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் விளக்கம் கொடுப்பாரா? கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருப்பது குறித்து, உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதா?
ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரச்சாரம் செய்த உதயநிதி அந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஏதேனும் முன்னேற்றம் அடைந்துள்ளதா, அதற்காக அவரின் பங்களிப்பு என்ன என்று பொதுமக்களிடத்தில் விளக்கிச் சொல்வதற்கு முன் வருவாரா? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற நல திட்டங்கள் எல்லாம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறதே. இதற்கெல்லாம் அவர் விளக்கம் அளிப்பாரா? மேலும் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே, அதற்காவது விளக்கம் சொல்வாரா? என்று உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் அம்மா திடல் என்று இருந்ததை கலைஞர் திடல் என்று மாற்றியிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு காலமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழா, 60 திருமண விழா, 120 திருமண விழா, முல்லைப் பெரியாறுக்காக அம்மாவிற்கு அனைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிற மாநாடு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்ற இளைஞர் பெருவிழா என பல விழாக்கள் சிறப்பாக நடைபெற்ற அம்மா திடலின் பெயரை கலைஞர் திடல் என மாற்றியது மட்டும் தான் திமுகவின் சாதனையாக தெரிகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளாசியுள்ளார்.