பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒருபகுதியாக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியேற்றுகிறார். டெல்லியில் குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைய உள்ளது. எனவே குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் கொண்டாடப்பட உள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய எல்லைப் புள்ளிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் இல்லாத மற்றும் சுமூகமான குடியரசு தின விழாவை உறுதிசெய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் 27,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் மற்ற உயரதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுடன் விழாவைக் கொண்டாடும் இடத்தைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மிக தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் டிரோன் விமானங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா வான்வழி விமானங்கள், பாராகிளைடர்கள் மற்றும் சூடான காற்று பலூன்கள் உள்ளிட்ட துணை மரபுவழி வான்வழி தளங்களை டெல்லியில் இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் 71 டிசிபிகள், 213 ஏசிபிகள், 753 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 27,723 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.