முதுகு தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோஹித் ஷர்மா… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

Photo of author

By Vinoth

முதுகு தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோஹித் ஷர்மா… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று பேட்டிங் செய்யும் போது முதுகு பிரச்சனைக் காரணமாக வெளியேறினார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே  தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.

இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 164 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸின் கே மேயர்ஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். அதைத்துரத்திய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அரைசதத்தால் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் இருந்து பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஸ்டிரைக் எடுக்கவிருந்தபோது, ​​இந்திய பிசியோ கமலேஷ் ஜெயின் மைதானத்திற்கு ஓடி வருவதை கேமரா காட்டியது, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ரோஹித் அவரது முதுகைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “தற்போது நான் நன்றாக உணர்கிறேன். அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்குள் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதனால் அடுத்த போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.