விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!
விராட் கோஹ்லி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.
அதே சமயம் கோலிக்கு ஆதரவான கருத்துகளும் எழுந்துள்ளன. தற்போது வரை கோலி 23000 சர்வதேச ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் அவர் சச்சினின் அதிக ரன்கள் என்ற சாதனையை முறியடிக்கக் கூடும்.
இந்நிலையில் முன்னாள் வீரர் கபில்தேவ் உள்ளிட்ட பலர் கோஹ்லி மேல் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். கோலி அணியில் இருந்து விலகி உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா “அவர் ஒரு சிறந்த வீரர்.
இந்திய அணிக்காக பல போட்டிகளை வெற்றிபெற்றுக் கொடுத்துள்ளார். அவர் மீண்டும் திரும்ப சில இன்னிங்ஸ்கள் தேவை என்று நான் நினைக்கிறேன். எல்லா வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இது ஒரு பாகம். அணியில் அவரின் இடத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.