தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது!

Photo of author

By Rupa

தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (32) எம்பிஏ பட்டதாரி. கோவையை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 2019-ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

இந்த நிதி நிறுவனத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களுரு ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 சதவீதம் வட்டி தருவதாகவும், 10 சதவீத வட்டியில் ஒரு சதவிகித வட்டி அரசுக்கு வருமான வரியாகச் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு வரி செலுத்தியதுபோக 9 சதவீத வட்டி மீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேனி நகர் மற்றும் தேனி மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் ரூபாய் 11 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் துவங்கிய முதல் மூன்று மாதம் வட்டி முறையாக வழங்கியுள்ளனர் .பின் கொரோனா முடக்கம் என்ற காரணம் சொல்லி வட்டி வழங்குவதை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து கொரோனா முடக்கம் முடிந்து இயல்பு நிலை திரும்பியும் வட்டியும் அசல் பணமும் திரும்ப தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு நிறுவன அதிபர் முத்துசாமி தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக மாவட்ட எஸ்பி அலுவலகம், காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

எனவே பல கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் முத்துச்சாமியை கைது செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழந்த தொகையை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனியை சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் தினேஷ் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முரளீதரன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறைக்கும் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். இந்த நிதி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தில் 64 பேரும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கம்பத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியரான சத்தியமூர்த்தி, முத்துச்சாமி மீது கொடுத்த மோசடி புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த தேனி குற்றப்பிரிவு போலீசார், நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் முத்துச்சாமியை கைது செய்தனர். தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்துச்சாமி, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நீதிமன்ற காவலில் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.